Saturday, May 28, 2011

இரண்டு டி சர்ட்டுகள்

என் நண்பர் ஒருவர் காவல் துறையில், திருப்பூரில், பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையில் மறக்கவே முடியாத அதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


ஜப்பானியர்கள் தான் அதிகமாக உழைக்கிறார்கள் என்று யார் சொன்னது. கடும் வெயிலில், வியர்வை கொட்ட, சலவை செய்த மொத்த பனியன் கட்டையும் வைத்து வளைந்த வாகாக, கடும் போக்குவரத்து நெரிசலில், குண்டும் குழியுமான சாலையில் (திருப்பூரில் பெரும்பாலும் சாலைகள் வேயப்படாமல் தான் இருக்கும்) டி. வி. எஸ் 50 வண்டியை செலுத்திக்கொண்டு பல நூறு பேர் பயணம் செய்வதை பார்க்காதவர்கள் தான், மேல் சொன்னவாறு ஜப்பானியரை புகழ்வார்கள்.

ஒரு நாள் நண்பர் சோதனை சாவடி ஒன்றில் பணியில் இருந்தார்.

அவரோடு இன்னொரு காவலரும் பணியில் இருந்தார். நல்ல வெயில் நேரம். கொளுத்தும் வெயிலில், வேர்வை ஒழுக ஒழுக, வண்டியோட்டிகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத நல்ல போலீஸ்.

ஒரு ஓவர் லோடு ஏற்றிய மினிடோர் ஆட்டோ ஒன்று வந்து இவர்கள் முன் ஆப் ஆகிவிட்டது. இந்த போலிஸ் காரர்களைப்பற்றி தெரியாத டிரைவர், "சார் ஆர்டர் அவசரம். நாளைக்கு சரக்கு அனுப்பனும். அதான் கொஞ்சம் லோடு ஓவராயிருச்சு." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். வண்டியை ஸ்டார்ட் பண்ணி பேசாமல் போயிருந்தால், இவர்கள் ஒன்றும் சொல்லியிருக்க போவதில்லை. அதிக பட்சம் ஒரு திட்டு விழுந்திருக்கும். அனால் டிரைவர் தன்னிலை விளக்கம் கொடுத்து தானாகவே வந்து மாட்டி கொண்டார். அத்தோடு நின்றிறுந்தால் பரவாயில்லை. ஒரு 500 தாளை எடுத்து நீட்டிவிட்டார். பொசுக்கென கோபம் வந்துவிட்டது. ஓவர் லோடு ஏத்தினதொட, லஞ்சம் வேற கொடுக்கிறாய என்று எகிறினார் இன்னொரு போலிஸ்காரர்.

அப்போதுதான் நண்பருக்கு, அந்த வழியாக பள்ளிக்கூடம் போய் வரும் ஒரு பையன் ஞபகம் வந்தது. அவன் ஒரு ஏழை மாணவன். கிழிந்த துணியோடு தினமும் சைக்கிளில் வந்து செல்பவன். ஒரு முறை அவன் கீழே விழுந்தபோது இவர்கள் தான் அவனுக்கு உதவி செய்து அனுப்பி வைத்துள்ளனர். அது முதல் அவன் இவர்களை பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்லிவிட்டுபோவது வாடிக்கையாகிவிட்டது.


அவன் நினைவு வந்தவுடனே, டிரைவரிடம் நண்பர் "அந்த மளிகைக் கடைக்கு போய் ரெண்டு பால் நோட்டு, ரெண்டு கட்டுரை நோட்டு, ரெண்டு பேனா, ஒரு ஜாமன்றி பாக்ஸ்" வாங்கி அங்கேயே கொடுத்துட்டு போய்டு". தப்பினால் போதுமடா சாமி என்று நினைத்த டிரைவர், நண்பர் சொன்ன மாதிரியே செய்துவிட்டு, கடைக்கராரிடம் கேட்டான். "ஐநூறு ரூவா வாங்க மாட்டேன்னு சொன்ன ஆளு, 65 ரூவா நோட்டு வாங்கி தரச் சொல்றார்"

"போன வாரம் தான் அவரு தன் காசப் போட்டு, ஒரு ஸ்கூல் பையனுக்கு பென்சில் ரப்பர் வாங்கி கொடுத்தார். அவனுக்காகத் தான் இதுவுமிருக்கும்" என்றார். இதை கேட்டு விட்டு, டிரைவர் அவசரமாக போய்விட்டார்.

பையன் வந்தவன், நோட்டு பேனா பாத்து சந்தோசப்பட்டு, தேங்க்ஸ் சார், ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக வீட்டுக்கு போனான். கொஞ்ச நேரம் கழித்து, ஒரு பெரிய வெள்ளை கலர் இன்னோவா கார் வந்து நின்றது. ஒரு பெரிய மனிதர் இறங்கினார். அவருடைய கலையாத வெள்ளை வேஷ்டியும், பொட்டும்  அவர் ஒரு பெரிய புள்ளி என சொல்லின.

வந்தவர் போலீஸ்காரர்களிடம்  போய், கொஞ்ச நேரம் முந்தி வந்த ஓவர் லோடு வண்டிய பிடிச்சது நீங்களா என கேட்டுள்ளார்.

"ஆமாங்க! என்ன ஆச்சுங்க!"

"நீங்க விட்டீங்களே அந்த லோடு வண்டி, அந்த கம்பெனியோட ஓனர் நான்தான். நீங்க 500 ரூவா கொடுத்தும் வேண்டாம்னு சொல்லிட்டு, 65 ரூபாக்கு ஒரு ஸ்கூல் பையனுக்கு நோட்டு புக் வாங்கிகுடுதீங்களாம். இந்தாங்க இத லஞ்சம்னு நெனைக்காம வாங்கிகோங்க" தன் கையில் இருந்த இரண்டு கவர்களை கொடுத்தார்.

"இதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். எங்களுக்கு வேண்டாங்க"

"இந்த மாதிரி போலிஸ்காரங்களை பார்க்க முடியாது. அதான் வேற யாருகிட்டயாவது கொடுத்து விட்டா நீங்க வாங்க மாட்டீங்கன்னு, நானே கொண்டு வந்தேன். இது என் கம்பெனில செஞ்சது. .ஃபாரின் பையர்ஸ் வந்த கம்ப்ளிமென்ட் குடுக்கற டி  ஷர்ட். இத ஒரு கிப்ட்-ஆ வச்சு கோங்க" சொல்லிவிட்டு கவரை கொடுத்தார்.

ஒரு பெரிய மனிதர், இவ்வளவு தூரம் சொல்கிறாரே என்றெண்ணி வாங்கி கொண்டார்கள் 


"தேங்க்ஸ் சார்"

"நீங்க நல்ல இருங்க" சொல்லிவிட்டு நகர்ந்தார் ஓனர்.

1 comment:

KANIVEL said...

A wonderful and motivating post Sivakumar! Thanks for sharing with us. I really admire your friends. They set a roll model to all public servants who wish to be honest.