Saturday, August 28, 2010

கதம்ப வண்டு

ஒரு நாள் திடீரென தீயணைப்பு வீரர்கள் எங்கள் அலுவலவகத்திற்கு வந்து நின்றனர். என்னது எதுக்கென்று விசாரித்ததில், கதம்ப வண்டுகளை அழிக்க வந்தவர்கள் என்பது தெரிந்தது. அதென்னப்பா கதம்ப வண்டு? விசாரித்ததில் அதிர்ச்சிகரமான விசயங்கள் தெரியவந்தன.


இவை கொட்டினால், விசம் சாகும் வரை உடலில் இருக்குமாம். இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுமாம். இரண்டு மூன்று வண்டுகள் கொட்டினால் மரணம் நிச்சயம் என்றும் சொன்னார்கள். இது தீயணைப்பு வீரர்கள் கவசம் அணிந்தபோதே தெரிந்தது.

இந்த வண்டுகள் தேனிக்கள் கூடு கட்டுவதைப் போல் கூடுகட்டி வாழக்கூடியன. மாலை நேரங்களில்தான் அவை வந்து கூடுகளில் அடையும். அவை தங்களை யாரவது தாக்க வந்தால் தப்பி ஓடாது. மற்றவர்களை பாதுகாக்க, தங்கள் உயிரை கொடுத்து போராடும் குணமுடையன(மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்?). தங்கள் செத்தாலும் பரவாயில்லை. எதிரிகளை எதிர்த்து போராடும் குணம் உடையதால், அவற்றை அழிப்பது அபாயம் மிகுந்த செயலாகும்.

எனவே, வீரர்கள் இருட்டும் வரை காத்திருந்தனர். நீண்ட கழிகளில் காதர் துணிகளை கம்பிகளை வைத்து கட்டினர். (பந்தம் கொழுத்த). கயிறால் கட்டினால், துணி எரியும் போது நம்மீது விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவேதான் கம்பி வைத்து கட்டினர். ஐந்தாறு பேர், ஹெல்மெட், முழங்கால் வரை ஷு என பக்கா பாதுகாப்போடு அது கூடு கட்டியிருந்த சமையலறை புகைபோக்கியிலும், மொட்டை மாடிக்கு சென்று புகை வெளிவரும் இடத்திலும் தீ வைத்தனர். ஒரு வாராக வண்டுகளை அழித்து முடித்தபோது, இரண்டு மணிநேரம் ஆயிருந்தது.

நான் பயந்து போய், ரொம்ப தூரம் சென்று நின்று விட்டேன். ஆனால் நண்பர்கள், திரு. பொன்னையா, திரு. கல்லூரணி முத்துக்குமரன், திரு. கல்லூரணி செல்லையா, திரு. கடையம் விஜய், திரு.வியாசர்பாடி ரவி சங்கர். திரு. மதுரை ஜெயக்குமார், திரு. திண்டுக்கல் பாலகிருஷ்ணன் ஆகியோர் கதம்ப வண்டின் ஆபத்தை மறந்து, துணிவுடன் தீயணைப்பு வீரர்களுடன் பணியாற்றியது மனதை சிலிர்க்க வைத்தது.

கவனம் நண்பர்களே.. கதம்ப வண்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

No comments: